அல்லாஹ்வே (என்) இரட்சகன்
2:126   وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏‏
2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
2:260   وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
3:35   اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏
3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
3:36   فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏
3:36. (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
3:38   هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:40   قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِىَ الْكِبَرُ وَامْرَاَتِىْ عَاقِرٌ‌ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَآءُ‏
3:40. அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
3:41   قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ‌ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ؕ‌ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ‏
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
3:47   قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
5:25   قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ‌ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْقَوْمِ الْفٰسِقِيْنَ‏
5:25. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
6:164   قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ نَـفْسٍ اِلَّا عَلَيْهَا‌ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
6:164. “அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
7:143   وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ‌ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ‌ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا‌ ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ‏
7:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
7:151   قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ‌ۖ  وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏
7:151. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
7:155   وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا‌ ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ‌ ؕ اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ‌ؕ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا‌ وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ‏
7:155. இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
11:45   وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِىْ مِنْ اَهْلِىْ وَاِنَّ وَعْدَكَ الْحَـقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ‏
11:45. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
11:47   قَالَ رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
11:47. “என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
12:33   قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ‌ۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ‏
12:33. (அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
12:101   رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏
12:101. “என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
14:35   وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَؕ‏
14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
14:36   رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِ‌ۚ فَمَنْ تَبِعَنِىْ فَاِنَّهٗ مِنِّىْ‌ۚ وَمَنْ عَصَانِىْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
14:36. (“என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.”
14:37   رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏
14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”
14:38   رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ‌ ؕ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَىْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ‏
14:38. “எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
14:40   رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ ۖ  رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏
14:40. (“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
15:36   قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
15:39   قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏
15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
17:24   وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
17:80   وَقُلْ رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا‏
17:80. “என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.
19:4   قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏
19:4. (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
19:6   يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ ۖ ‌ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا‏
19:6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
19:8   قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا‏
19:8. (அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
19:10   قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً‌  ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا‏
19:10. (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
20:25   قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏
20:25. (அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
20:84   قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏
20:84. (அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
20:114   فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ‌ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏
20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
20:125   قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏
20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
21:89   وَزَكَرِيَّاۤ اِذْ نَادٰى رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏
21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது:
21:112   قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَـقِّ‌ؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏
21:112. என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.
23:26   قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
23:26. “என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
23:29   وَقُلْ رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ‏
23:29. மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
23:39   قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
23:39. “என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
23:93   قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ‏
23:93. (நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்:
23:94   رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
23:94. “என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று.
23:97   وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏
23:97. இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
23:98   وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏
23:98. “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
23:99   حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
23:118   وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏
23:118. இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
25:30   وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا‏
25:30. “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
26:12   قَالَ رَبِّ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِؕ‏
26:12. (இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
26:83   رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏
26:83. “இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
26:117   قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏
26:117. அவர் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
27:19   فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏
27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
27:44   قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
28:16   قَالَ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ فَغَفَرَ لَهٗ‌ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
28:16. “என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
28:17   قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَىَّ فَلَنْ اَكُوْنَ ظَهِيْرًا لِّلْمُجْرِمِيْنَ‏
28:17. “என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
28:21   فَخَرَجَ مِنْهَا خَآٮِٕفًا يَّتَرَقَّبُ‌ قَالَ رَبِّ نَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
28:21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
28:24   فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏
28:24. ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
28:33   قَالَ رَبِّ اِنِّىْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ‏
28:33. (அதற்கு அவர்): “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறினார்.
29:30   قَالَ رَبِّ انْصُرْنِىْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ‏
29:30. அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
37:100   رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏
37:100. “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
38:35   قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
38:35. “என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
38:79   قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
38:79. “இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.
43:88   وَقِيْلِهٖ يٰرَبِّ اِنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ لَّا يُؤْمِنُوْنَ‌ۘ‏
43:88. “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
46:15   وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌ ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
63:10   وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
66:11   وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
66:11. மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
71:5   قَالَ رَبِّ اِنِّىْ دَعَوْتُ قَوْمِىْ لَيْلًا وَّنَهَارًا ۙ‏
71:5. பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
71:21   قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِىْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا‌ ۚ‏
71:21. நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
71:26   وَ قَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا‏
71:26. அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
71:28   رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا‏
71:28. “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).