69. ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
மக்கீ, வசனங்கள்: 52

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
69:1 اَلْحَـآقَّةُ ۙ‏
69:1. நிச்சயமானது.
69:1. (நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)
69:1. நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்!
69:1. உறுதியாக நடந்தேறக்கூடியதா(ன மறுமைநாளா)னது-
69:2 مَا الْحَـآقَّةُ‌ ۚ‏
69:2. நிச்சயமானது எது?
69:2. அந்த உண்மை(ச் சம்பவம்) எது?
69:2. நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன?
69:2. உறுதியாக நடந்தேறக்கூடியது என்ன?
69:3 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحَــآقَّةُ ؕ‏
69:3. அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
69:3. (நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா?
69:3. நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா?
69:3. உறுதியாக நடந்தேறக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
69:4 كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌۢ بِالْقَارِعَةِ‏
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
69:4. "ஸமூத்" என்னும் மக்களும் "ஆத்" என்னும் மக்களும் (மரணித்த வர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்.
69:4. ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர்.
69:4. ஸமூது (கூட்டத்தினரும், ஆது) கூட்டத்தினரும் (இதயங்களைத்) திடுக்கிடச் செய்யக்கூடியதை (மறுமைநாளை)ப் பொய்யாக்கினர்.
69:5 فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ‏
69:5. எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:5. ஆகவே, ஸமூத் என்னும் மக்கள் ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
69:5. எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள்.
69:5. ஆகவே, (ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய) ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
69:6 وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ‏
69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:6. ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
69:6. ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள்.
69:6. இன்னும், (ஹூது நபியின் கூட்டத்தாராகிய) ஆது, பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
69:7 سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏
69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
69:7. ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீங்கள் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்கள்.
69:7. அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
69:7. ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி (வீசச்செய்து) இருந்தான், ஆகவே, (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை-நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர்.
69:8 فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ‏
69:8. ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
69:8. (இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீங்கள் காண்கின்றீர்களா?
69:8. இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?
69:8. ஆகவே, (இன்றைக்கும்) அவர்களில் எஞ்சியிருப்போரை நீர் காண்கின்றீரா?
69:9 وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَـاطِئَةِ‌ۚ‏
69:9. அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
69:9. ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.
69:9. ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
69:9. மேலும், ஃபிர் அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலை கீழாய்ப் புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (இணைவைத்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்துப்) பாவச்செயலைச் செய்து வந்தார்கள்.
69:10 فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِيَةً‏
69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
69:10. தவிர அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.
69:10. அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான்.
69:10. ஆகவே, அவர்கள் தங்கள் இரட்சகனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆகையால், அவன் அவர்களை மிகக் கடுமையான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
69:11 اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِى الْجَارِيَةِ ۙ‏
69:11. தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
69:11. (நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்த போது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.
69:11. வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்;
69:11. தண்ணீர் எல்லை மீறிய(தால் பெருக்கெடுத்து ஓடிய)பொழுது, நிச்சயமாக நாம் உங்(கள் முன்னோர்)களைக் கப்பலில் ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.
69:12 لِنَجْعَلَهَا لَـكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَاۤ اُذُنٌ وَّاعِيَةٌ‏
69:12. அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
69:12. அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதனைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).
69:12. இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
69:12. அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்காகவும், பேணிப்பாதுகாக்கும் செவி, அதனை (க்கேட்ட பின் நினைவில் வைத்து) பேணிப் பாதுகாப்பதற்காகவும் (அவ்வாறு செய்தோம்).
69:13 فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ‏
69:13. எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
69:13. (பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,
69:13. பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது
69:13. ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்-
69:14 وَحُمِلَتِ الْاَرْضُ وَ الْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۙ‏
69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
69:14. பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிப்பட்டால்,
69:14. மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ;
69:14. பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்,
69:15 فَيَوْمَٮِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏
69:15. அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
69:15. அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.
69:15. அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்!
69:15. அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்து விடும்.
69:16 وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِىَ يَوْمَٮِٕذٍ وَّاهِيَةٌ ۙ‏
69:16. வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
69:16. அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகிவிடும்.
69:16. மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும்.
69:16. வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.
69:17 وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ‌ؕ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ ؕ‏
69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
69:17. (நபியே!) மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றி, அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை, எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.
69:17. வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள்.
69:17. இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உமதிரட்சகனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டிருப்பார்கள்.
69:18 يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏
69:18. (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
69:18. (மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்துவிடாது.
69:18. அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது.
69:18. (மனிதர்களே! அந்நாளில் நீங்கள் (உங்கள் இரட்சகன் முன்) எடுத்துக் காட்டப்படுவீர்கள்; உங்களிலிருந்து மறையக்கூடியது எதுவும் (அவனுக்கு) மறைந்துவிடாது.
69:19 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏
69:19. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
69:19. எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ அவன் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்) "இதோ! என்னுடைய ஏடு; இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்" என்றும்,
69:19. அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
69:19. ஆகவே, எவர், தன்னுடைய பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அவர், (மற்றவர்களிடம்) வாருங்கள், என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்று (மகிழ்ச்சியுடன்) கூறுவார்.
69:20 اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏
69:20. “நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
69:20. "நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்" என்றும் கூறுவான்.
69:20. நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!”
69:20. “நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை நிச்சயமாக சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்” (என்றும் கூறுவார்)
69:21 فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏
69:21. ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
69:21. ஆகவே, அவன் திருப்தியடையும்படியான சுகபோகத்தில்,
69:21. அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார்,
69:21. ஆகவே, அவர் திருப்தியான வாழ்வில் இருப்பார்.
69:22 فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏
69:22. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
69:22. மேலான சுவனபதியில் இருப்பான்.
69:22. உன்னதமான சுவனத்தில்;
69:22. உயர்வான சுவனத்தில் இருப்பார்.
69:23 قُطُوْفُهَا دَانِيَةٌ‏
69:23. அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
69:23. அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.
69:23. அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
69:23. அதன் கனிகள் (அவர்களின் கைக்கெட்டும் விதமாக பறிப்பதற்கு மிக) நெருங்கியவையாக இருக்கும்.
69:24 كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏
69:24. “சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
69:24. (இவர்களை நோக்கி) "சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை (நன்மை)களின் காரணமாக, மிக்க தாராளமாக இவைகளைப் புசியுங்கள்! அருந்துங்கள்" (என்று கூறப்படும்).
69:24. (இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
69:24. (இவர்களிடம்,) “சென்று போன நாட்களில் (உலகில் மறுமைக்காக நன்மையானவற்றை) நீங்கள் முற்படுத்தி வைத்திருந்த காரணத்திற்காக, மகிழ்வோடு (இவைகளை) உண்ணுங்கள், இன்னும், அருந்துங்கள்” (என்று கூறப்படும்)
69:25 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌ۚ‏
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:25. எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், "என்னுடைய ஏடு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா?
69:25. மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
69:25. இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன், “என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
69:26 وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْ‌ۚ‏
69:26. “அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:26. என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா?
69:26. என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?
69:26. மேலும், “என்னுடைய கணக்கு என்னவென்பதை நான் அறியவில்லையே!”
69:27 يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ‌ ۚ‏
69:27. “(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:27. நான் இறந்தபொழுதே என்னுடைய காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டாமா?
69:27. அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா?
69:27. (நான் இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படாது) “அதுவே முடிவாக இருந்திருக்க வேண்டுமே!”
69:28 مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْۚ‏
69:28. “என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:28. என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்க வில்லையே!
69:28. இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே!
69:28. “என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!”
69:29 هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌ۚ‏
69:29. “என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
69:29. என்னுடைய அரசாட்சியும் அழிந்துவிட்டதே!" என்று புலம்புவான்.
69:29. என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!”
69:29. “என்னுடைய அதிகாரமும் என்னைவிட்டு அழிந்துவிட்டதே!” (என்று புலம்புவான்)
69:30 خُذُوْهُ فَغُلُّوْهُ ۙ‏
69:30. “(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
69:30. (பின்னர் நாம்) "அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;
69:30. (ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்!
69:30. பின்னர், (வல்ல அல்லாஹ் தன் மலக்குகளுக்கு) “அவனைப் பிடியுங்கள், அப்பால் அவனுக்கு விலங்கிடுங்கள்”
69:31 ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ ۙ‏
69:31. “பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
69:31. அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,
69:31. பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்!
69:31. “பின்னர் நரகத்தில் அவனைத் தள்ளுங்கள்”
69:32 ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ؕ‏
69:32. “பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
69:32. எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" என்றும் (கூறுவோம்).
69:32. பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.”
69:32. “பின்னர், அதன் நீளமானது எழுபது முழமுள்ள(தாக இருக்கும் சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்றும் கூறுவான்)
69:33 اِنَّهٗ كَانَ لَا يُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِيْمِۙ‏
69:33. “நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
69:33. நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கைக் கொள்ளவில்லை.
69:33. மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான்.
69:33. “நிச்சயமாக அவன், மகத்துவமிக்க அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளாதவனாக அவன் இருந்தான்”
69:34 وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏
69:34. “அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
69:34. ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.
69:34. ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான்.
69:34. “ஏழைக்கு (தான் ஆகாரமளிக்காததுடன் பிறரையும்) ஆகாரமளிக்கும்படி அவன் தூண்டவுமில்லை”.
69:35 فَلَيْسَ لَـهُ الْيَوْمَ هٰهُنَا حَمِيْمٌۙ‏
69:35. “எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
69:35. "ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கு யாதொரு நண்பனும் இல்லை.
69:35. எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை.
69:35. “ஆகவே இன்றையத் தினம் அவனுக்கு இங்கு (உதவ) நண்பன் (எவனும்) இல்லை.
69:36 وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ‏
69:36. “சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”
69:36. (புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை" (என்றும் கூறப்படும்).
69:36. சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை;
69:36. (நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) “சீழ் ஜலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவுமில்லை” (என்றும் கூறப்படும்).
69:37 لَّا يَاْكُلُهٗۤ اِلَّا الْخٰطِئُوْنَ‏
69:37. “குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”  
69:37. அதனைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.
69:37. தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை.
69:37. அதனைப் பாவிகளை தவிர (மற்றெவரும்) புசிக்க மாட்டார்கள்.
69:38 فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ‏
69:38. ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
69:38. (மக்களே!) நீங்கள் பார்ப்பவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவைகளின் மீதும்,)
69:38. இல்லை! நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்,
69:38. ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
69:39 وَمَا لَا تُبْصِرُوْنَۙ‏
69:39. நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
69:39. நீங்கள் பார்க்காதவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவைகளின் மீதும்) சத்தியமாக!
69:39. நீங்கள் பார்க்காதவற்றின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்!
69:39. நீங்கள் பார்க்காதவற்றைக் கொண்டும், (நான் சத்தியம் செய்கிறேன்).
69:40 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۚ ۙ‏
69:40. நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
69:40. இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்ட படியே) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.
69:40. இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும்.
69:40. நிச்சயமாக இது மிக்க சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும்.
69:41 وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ‌ؕ قَلِيْلًا مَّا تُؤْمِنُوْنَۙ‏
69:41. இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
69:41. இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
69:41. யாரோ ஒரு கவிஞனின் சொல்லல்ல. நீங்கள் குறைவாகத்தான் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
69:41. இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே விசுவாசிக்கின்றீர்கள்.
69:42 وَلَا بِقَوْلِ كَاهِنٍ‌ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَؕ‏
69:42. (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
69:42. (இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள்.
69:42. இது யாரோ ஒரு ஜோதிடனின் சொல்லும் அல்ல. நீங்கள் குறைவாகத்தான் சிந்திக்கிறீர்கள்.
69:42. (இது) ஒரு குறிகாரனின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுணர்வு பெறுகின்றீர்கள்.
69:43 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
69:43. அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
69:43. அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.
69:43. இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும்.
69:43. அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இது) இறக்கப்பட்டுள்ளதாகும்.
69:44 وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ‏
69:44. அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
69:44. யாதொரு வார்த்தையை அவர் எம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினால்,
69:44. மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்
69:44. இன்னும், அவர் நம் மீது சொற்களில் (நாம் சொல்லாத) சிலவற்றை இட்டுக்கட்டி(க்கூறி)யிருப்பாரானால்-
69:45 لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ‏
69:45. அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
69:45. அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,
69:45. நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம்.
69:45. திட்டமாக அவருடைய வலக்கரத்தை நாம் பலமாகப் பிடித்துக் கொண்டிருப்போம்.
69:46 ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ  ۖ‏
69:46. பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
69:46. அவருடைய உயிர் நாடியை நாம் தறித்துவிடுவோம்.
69:46. பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்.
69:46. பின்னர், அவருடைய (இதயத்தோடு சம்பந்தப்பட்ட) உயிர் நரம்பை நாம் தறித்துவிடுவோம்.
69:47 فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ‏
69:47. அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
69:47. உங்களில் எவருமே அவரை விட்டும் அதனைத் தடுத்துவிட முடியாது.
69:47. பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மைத்) தடுப்பவராய் இருக்க முடியாது!
69:47. அப்போது, உங்களில் அவரைவிட்டும் (நாம் செய்யும் வேதனையை) தடுத்துவிடக்கூடியவர்கள் எவருமிலர்.
69:48 وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ‏
69:48. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:48. நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கின்றது.
69:48. உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும்.
69:48. மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது பயபக்தியுடையோர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:49 وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِيْنَ‏
69:49. ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
69:49. (எனினும்,) உங்களில் அதனைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
69:49. உங்களில் பொய்யென வாதிடுபவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
69:49. நிச்சயமாக (அதனைப்) பொய்யாக்குகிறவர்களும் உங்களில் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
69:50 وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَى الْكٰفِرِيْنَ‏
69:50. அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
69:50. நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கின்றது.
69:50. இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது மனவருத்தத்தை அளிக்கக்கூடியதே ஆகும்.
69:50. மேலும், நிச்சயமாக இது நிராகரிப்போருக்கு கைசேதமாகும்.
69:51  وَاِنَّهٗ لَحَـقُّ الْيَقِيْنِ‏
69:51. மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
69:51. (எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
69:51. மேலும், இது முற்றிலும் உறுதியான சத்தியமாகும்.
69:51. மேலும், நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும்.
69:52 فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏
69:52. ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
69:52. ஆகவே, (நபியே!) நீங்கள் மகத்தான உங்கள் இறைவனின் திருப்பெயரை துதி செய்து கொண்டிருப்பீராக!
69:52. எனவே, (நபியே) உம்முடைய மகத்தான அதிபதியின் பெயரைத் துதிப்பீராக!
69:52. ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!