54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)
மக்கீ, வசனங்கள்: 55

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
54:1 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏
54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
54:1. மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.
54:1. மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது.
54:1. மறுமைநாள் நெருங்கிவிட்டது, (அது பற்றித் தெரிவிக்க) சந்திரனும் பிளந்து விட்டது.
54:2 وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ‏
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
54:2. எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து "இது சகஜமான சூனியந்தான்" என்று கூறுகின்றனர்.
54:2. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக் கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள்.
54:2. அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும், (அதனை) அவர்கள் புறக்கணித்துவிட்டு, இது (நாள்தோறும்) தொடர்ந்துவரும் சூனியம் என்றும் கூறுகின்றனர்.
54:3 وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‌ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ‏
54:3. அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
54:3. அன்றி, அதனை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதனை புறக்கணித்தாலும் வர வேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்.
54:3. இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும்.
54:3. அன்றியும், அதனை அவர்கள் பொய்யாக்கிவிட்டனர், தங்களின் மனோ ஆசைகளையே பின்பற்றுகின்றனர், (அவர்கள் எவ்வாறு நடந்துகொண்ட போதிலும், வரவேண்டிய) ஒவ்வொரு காரியமும் (அதனதன் நேரத்தில்) நிலை பெறக்கூடியதாகும்.
54:4 وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِيْهِ مُزْدَجَرٌۙ‏
54:4. அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
54:4. (இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன.
54:4. மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன;
54:4. இன்னும், எதில் (அவர்களுக்கு) அச்சுறுத்தல் உண்டோ அத்தகைய செய்திகள், (இதற்கு முன்னரும்) திட்டமாக அவர்களுக்கு வந்திருக்கின்றன.
54:5 حِكْمَةٌ ۢ بَالِغَةٌ‌ فَمَا تُغْنِ النُّذُرُۙ‏
54:5. நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
54:5. (அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக் கூடியவை தான். எனினும், (அவைகளைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) யாதொரு பயனும் அளிக்கவில்லை.
54:5. மேலும், அறிவுரையின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் விவேகமும் உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை.
54:5. (இவ்வேதமானது பூரணமான) உச்சத்தை அடைந்துவிட்ட அறிவுகளுடையவை, ஆனால், எச்சரிக்கைகள் (இவர்களுக்கு) யாதொரு பயனுமளிக்கவில்லை.
54:6 فَتَوَلَّ عَنْهُمْ‌ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ اِلٰى شَىْءٍ نُّكُرٍۙ‏
54:6. ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்:
54:6. ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
54:6. எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்;
54:6. ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக! (இன்னும் இவர்கள்) வெறுக்கும் (அந்தகேள்விகணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்_
54:7 خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏
54:7. (தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
54:7. (அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல் அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள்.
54:7. மக்கள் பயந்த பார்வைகளுடன் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளிவருவார்கள்; சிதறிய வெட்டுக்கிளிகளைப்போல்
54:7. அவர்களின் பார்வைகள் கீழ் நோக்கிய நிலையில் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவர்.
54:8 مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِ‌ؕ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ‏
54:8. அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
54:8. இது மிக கஷ்டமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள்.
54:8. அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!”
54:8. அழைப்பவர் பால் விரைந்தவர்களாக, (வெளியேறுவர்) “இது மிகக் கஷ்டமான நாள்” என்று நிராகரித்துக்கொண்டிருப்போர் (அச்சமயம்) கூறுவார்கள்.
54:9 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ‏
54:9. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
54:9. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம்முடைய தூதராகிய அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (துன்புறுத்துவதாகவும்) மிரட்டிக் கொண்டுமிருந்தார்கள்.
54:9. இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
54:9. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய சமூகத்தார் (அந்நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்கள் நம்முடைய அடியாரைப் பொய்யாக்கிப் பைத்தியக்காரரென்றும் அவர்கள் கூறினர். இன்னும், (அவர்களால் தன் தூதை எத்தி வைக்கமுடியாதவாறு) அவர் விரட்டப்பட்டார்.
54:10 فَدَعَا رَبَّهٗۤ اَنِّىْ مَغْلُوْبٌ فَانْـتَصِرْ‏
54:10. அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
54:10. ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!" என்று பிரார்த்தனை செய்தார்.
54:10. இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!”
54:10. ஆகவே, அவர் நிச்சயமாக நான் (இவர்களால்) மிகைக்கப்பட்டு விட்டவன். ஆகவே நீ எனக்கு உதவி செய்(து அவர்களுக்கு தண்டனை வழங்கு)வாயாக! என தம் இரட்சகனிடம் அவர் பிரார்த்தனை செய்தார்.
54:11 فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۖ‏
54:11. ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
54:11. ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.
54:11. அப்போது வானின் வாயில்களைத் திறந்துவிட்டு, மழையைக் கொட்டச் செய்தோம்.
54:11. ஆதலால், கடுமையாகக் கொட்டும் நீரைக் கொண்டு வானத்தின் வாயில்களை நாம் திறந்து விட்டோம்.
54:12 وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ‌ۚ‏
54:12. மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
54:12. அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத் திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.
54:12. மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது.
54:12. அன்றியும், பூமியை ஊற்றுக் கண்களாக(ப் பீறிட்டு)ப் பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, (ஆதியில்) நிர்ணயிக்கப்பட்ட காரியத்தின் மீது (வானம், பூமி ஆகியவற்றின்) நீரும் இணைந்தது.
54:13 وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ‏
54:13. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
54:13. நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.
54:13. மேலும், மரப்பலகைகளால் செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்டதில் (கப்பலில்) நாம் நூஹை ஏற்றினோம்.
54:13. நாம் அவரை(யும், அவருடனிருந்தவர்களையும்) பலகைகளும், ஆணிகளும் உடைய (மரக்கலத்)தின் மீது ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.
54:14 تَجْرِىْ بِاَعْيُنِنَا‌ۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ‏
54:14. எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
54:14. அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.
54:14. அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்!
54:14. அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது, (இவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு (நூஹ் நபிக்குக் கொடுக்கப்படும் நற்) கூலியாக (இவ்வாறு அவர்களை நாம் தண்டித்தோம்).
54:15 وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
54:15. நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:15. நிச்சயமாக நாம் இதனை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்துவிட்டோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா?
54:15. அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
54:15. மேலும், நிச்சயமாக நாம் இதனை (பின்னுள்ளவர்களுக்கு) ஓர் அத்தாட்சியாக விட்டுவைத்தோம், (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
54:16 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
54:16. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:16. நம்முடைய வேதனையும், அச்சமூட்டி அறிவித்தலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
54:16. பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:16. என்னுடைய வேதனையும், (என்னுடைய) எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன? (என்பதை கவனிப்பார்களா?)
54:17 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
54:17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:17. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
54:17. நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?
54:17. திட்டமாக நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
54:18 كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
54:18. “ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:18. ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
54:18. ‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:18. ஆது (சமூகத்தாரும் நம் தூதரைப்) பொய்யாக்கிக்கொண்டிருந்தனர், பின்னர் (அவர்களுக்கு என் கட்டளையின்படி ஏற்பட்ட) என்னுடைய வேதனையும், (என்னுடைய எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதைக் கவனிப்பார்களா)?
54:19 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ‏
54:19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
54:19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப் பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பி வைத்தோம்.
54:19. நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய ஒரு நாளில் நாம் கடுமையான புயல்காற்றை அவர்களின் மீது அனுப்பினோம்.
54:19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, (என்றும்) நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில், மிகக்கடும் சப்தமு(ம் குளிரும் உ)டைய காற்றை அனுப்பி வைத்தோம்.
54:20 تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ‏
54:20. நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
54:20. அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது.
54:20. அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள்.
54:20. அதுமனிதர்களை_நிச்சயமாக அவர்கள் (பூமிக்குள்ளிருந்து வேரோடு) பிடுங்கக்கபட்ட பேரீச்ச மரங்களின் அடிவேர்களைப் போல (ஆகும் நிலையில்) பிடுங்கி (எறிந்து) விட்டது.
54:21 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
54:21. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
54:21. நம்முடைய வேதனையும், அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
54:21. பார்த்துக் கொள்ளுங்கள்: எப்படி இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:21. என்னுடைய வேதனையும், எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதை கவனிப்பார்களா)?
54:22 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
54:22. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
54:22. (மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
54:22. நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
54:22. திட்டமாக, நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
54:23 كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ‏
54:23. ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
54:23. (இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும், தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை (செய்த ஸாலிஹ் நபி)யைப் பொய்யாக்கினர்.
54:23. ‘ஸமூத்’ சமுதாயத்தினரும் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதிட்டார்கள்.
54:23. (இவ்வாறே) ஸமூது (கூட்டத்தாரு)ம் எச்சரிக்கையாளர்களைப் பொய்யாக்கினர்.
54:24 فَقَالُـوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ وَّسُعُرٍ‏
54:24. “நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
54:24. (பொய்யாக்கியதுடன்) "நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று கஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
54:24. மேலும், கூறலானார்கள்: “நம்மிலுள்ள ஒரு தனிப்பட்ட மனிதரையா நாம் பின்பற்றிச் செல்வது? அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏற்றுக்கொண்டோமானால், நாம் வழிகெட்டுப் போய் விட்டோம்; நமது புத்தி பேதலித்துவிட்டது என்பது அதன் பொருளாகும்.
54:24. பின்னர், “நம்மிலுள்ள ஒரு மனிதரை_ அவரையா நாம் பின் பற்றுவோம்? (அவ்வாறு பின்பற்றினால்) நிச்சயமாக, நாம் அப்பொழுது வழிகேட்டிலும், சிரமத்திலும் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.
54:25 ءَاُلْقِىَ الذِّكْرُ عَلَيْهِ مِنْۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ‏
54:25. “நம்மிடையே இருந்து அவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்; அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்” (என்றும் அவர்கள் கூறினர்).
54:25. அன்றி "நமக்குள் (நம்மையன்றி) இவர் மீதுதானா வேதம் இறக்கப்பட்டது? அன்று! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்" என்றனர்.
54:25. இறைவனின் அறிவுரை அருளப்படுவதற்கு நமக்கு மத்தியில் இவர் ஒருவர்தான் இருக்கின்றாரா, என்ன?”
54:25. “நமக்கிடையே இவர் மீதுதானா (திக்ரு எனும்) வேதம் இறக்கப்பட்டது? அன்று! அவர் இறுமாப்புக் கொண்ட பெரும் பொய்யர்” (என்று கூறினார்கள்).
54:26 سَيَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ‏
54:26. “ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?” என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
54:26. பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகுவிரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள்.
54:26. (நாம் நம்முடைய தூதரிடம் கூறினோம்:) “நாளையதினம் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; யார் வடிகட்டிய பொய்யர், தற்பெருமைக்காரர் என்று!
54:26. “இறுமாப்புக் கொண்டவரான பெரும் பொய்யர் யார்” என்பதை, நிச்சயமாக நாளைய தினம் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
54:27 اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ‏
54:27. அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
54:27. (ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீங்கள் பொறுமையாயிருந்து அவர்களைக் கவனித்து வாருங்கள்.
54:27. நாம் பெண் ஒட்டகத்தை இவர்களுக்குச் சோதனையாக ஆக்கி அனுப்புகின்றோம். எனவே, இப்போது சற்றுப் பொறுத்திருந்து பாரும்; இவர்களின் கதி என்னவாகிறது என்று!
54:27. (ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக “ஒரு பெண் ஒட்டகத்தை நிச்சயமாக நாம் அனுப்பிவைப்போராக உள்ளோம், ஆகவே (ஸாலிஹ் நபியே!) நீர் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு, பொறுமையுடனும் இருப்பீராக!
54:28 وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْ‌ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ‏
54:28. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
54:28. (அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம் என்றும், அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் (என்றும் நாம் கூறினோம்).
54:28. தண்ணீர் இவர்களுக்கும் ஒட்டகத்துக்கும் இடையே பங்கிடப்படும் என்றும், ஒவ்வொருவரும் (தம் முறை நாளில் தண்ணீருக்கு) வர வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவித்துவிடும்.”
54:28. நிச்சயமாக, (கிணற்றின்) “தண்ணீர் அவர்களுக்கும் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, ஒவ்வோரு தண்ணீர் முறை பாகமும் (முறைப்படி அவரவர் நாளில் குடிப்பதற்கு) என்றும், அவர்களுக்கு அறிவித்து விடுவீராக!” (என்றும் நாம் கூறினோம்).
54:29 فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰى فَعَقَرَ‏
54:29. ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
54:29. எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்களுடைய நண்பனை அழைத்தனர். அவன் அதனை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்துவிட்டான்.
54:29. இறுதியில், அவர்கள் தங்களுடைய ஆளை அழைத்தார்கள். அவர் இந்தப் பணியை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒட்டகத்தைக் கொன்றுவிட்டார்.
54:29. எனினும், அவர்கள் (ஒட்டகத்தை அறுத்து விட) தங்களுடைய தோழனை அழைத்தனர், அவன் (வாளை எடுத்து, தன் கையால் ஒட்டகத்தைப்) பிடித்தான், (அதன் கால் நரம்புகளைத் தறித்து) பின்னர் அறுத்து விட்டான்.
54:30 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
54:30. என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:30. ஆகவே, நம்முடைய வேதனையும், நம்முடைய எச்சரிக்கையும் எவ்வாறாயிற்று (என்பதை இவர்கள் கவனிப் பார்களா)?
54:30. பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்: எவ்வளவு கொடூரமாக இருந்தது நான் அளித்த வேதனை; எவ்வளவு உண்மையானவையாக இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:30. ஆகவே, என்னுடைய வேதனையும் (என்னுடைய) எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன?
54:31 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ‏
54:31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
54:31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத்தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க்கூளங்)களைப் போல் அவர்கள் ஆகி விட்டார்கள்.
54:31. நாம் ஒரேயொரு ஓசையைத்தான் அவர்களின் மீது அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள்.
54:31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, ஒரே ஒரு (பேரிடிச்) சப்தத்தை அனுப்பி வைத்தோம், அதனால் வேலி கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளங்களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.
54:32 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
54:32. நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:32. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்தக் குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கின்றோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
54:32. நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
54:32. திட்டமாக நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கியும் இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் எவரும் உண்டா?
54:33 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢ بِالنُّذُرِ‏
54:33. லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
54:33. லூத்துடைய மக்களும் நம்முடைய எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள்.
54:33. லூத்தின் சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதித்தார்கள்.
54:33. (நம்முடைய) எச்சரிக்கையாளர்களை லூத்துடைய சமூகத்தார் பொய்யாக்கினார்கள்.
54:34 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕ نَّجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ‏
54:34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
54:34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்.
54:34. நாம் கல்மாரி பொழியும் காற்றை அவர்கள் மீது ஏவினோம். லூத்தின் குடும்பத்தினர் மட்டுமே அதிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். நாம் நம்முடைய அருளினால் இரவின் பின்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம்.
54:34. அவர்கள் மீது, நாம் கல்மாரியை அனுப்பிவைத்தோம். (அல்லாஹ்வின் தூதராகிய) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, அதிகாலை நேரத்தில் நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.
54:35 نِّعْمَةً مِّنْ عِنْدِنَا‌ؕ كَذٰلِكَ نَجْزِىْ مَنْ شَكَرَ‏
54:35. நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
54:35. இது நம்முடைய அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்து பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
54:35. இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்; நன்றி செலுத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும்!
54:35. நம்மிடமிருந்துள்ள அருட்கொடையாக (இவ்வாறு செய்தோம்), இவ்வாறே நன்றி செலுத்துவோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
54:36 وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَـنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ‏
54:36. திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
54:36. (அவர்களை) நாம் பிடித்துக் கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்.
54:36. லூத் தம்முடைய சமூக மக்களுக்கு நம்முடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் எல்லா எச்சரிக்கைகளையும் சந்தேகமானவை எனக் கருதி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள்.
54:36. நம் (வேதனையின்) பிடியைப்பற்றி நிச்சயமாக (லூத் நபியாகிய) அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார், எனினும், அவ்வெச்சரிக்கையைப் பற்றி அவர்கள் சந்தேகித்தார்கள்.
54:37 وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ‏
54:37. அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
54:37. அன்றி, அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத் திற்காக) மயக்கி (அடித்து)க் கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டு, நம்முடைய வேதனையையும், எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் என்று கூறினோம்.
54:37. பின்னர் அவருடைய விருந்தாளிகளைப் பாதுகாப்பதிலிருந்து அவரை விலகியிருக்கச் செய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். இறுதியில், நாம் அவர்களுடைய கண்களை அவித்துவிட்டோம். சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்!
54:37. அன்றியும், திட்டமாக அவருடைய விருந்தினரை(க் கெட்ட காரியத்திற்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு) அவரிடம் தேடினார்கள். ஆகவே அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம், ஆகவே, என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
54:38 وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ‌ ۚ‏
54:38. எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
54:38. ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது.
54:38. அதிகாலையில் ஒரு மாபெரிய வேதனை அவர்களை வந்தடைந்தது.
54:38. ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களுக்கு நிச்சயமாக ஏற்பட்டுவிட்டது.
54:39 فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ‏
54:39. “ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
54:39. நம்முடைய வேதனையையும், நம்முடைய அச்ச மூட்டலையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
54:39. சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்
54:39. எனவே, “என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
54:40 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
54:40. நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
54:40. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனை, நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
54:40. நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுவதற்கு எவரேனும் இருக்கின்றாரா?
54:40. திட்டமாக நாம், குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், (ஆகவே, இதனை கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
54:41 وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ‌ۚ‏
54:41. ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
54:41. நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன.
54:41. மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடம் எச்சரிக்கைகள் வந்திருந்தன.
54:41. மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்னுடைய கூட்டத்தரரிடம் (பல) எச்சரிக்கையாளர்கள் வந்தனர்.
54:42 كَذَّبُوْا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِيْزٍ مُّقْتَدِرٍ‏
54:42. ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
54:42. நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
54:42. ஆனால் அவர்கள் நம்முடைய சான்றுகள் அனைத்தையும் பொய்யென்று வாதித்தார்கள். இறுதியில், நாம் அவர்கள் அனைவரையும் பிடித்துக் கொண்டோம். யாவரையும் மிகைத்த, வலிமை மிக்க ஒருவன் பிடிப்பதைப் போன்று!
54:42. ஆனால், நம்முடைய அத்தாட்சிகளை_ அவை அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, சக்தி வாய்ந்த மிகைப்பவனின் பிடியாக நாம் அவர்களைப் பிடித்துக்கொண்டோம் (அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை).
54:43 اَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ اُولٰٓٮِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِى الزُّبُرِ‌ۚ‏
54:43. (சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
54:43. (மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்து போன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்காக) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா?
54:43. என்ன, உங்களுடைய நிராகரிப்பாளர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வான்மறைகளில் உங்களுக்காகப் பாவமன்னிப்பு ஏதும் எழுதப்பட்டு இருக்கிறதா?
54:43. (மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரித்துக்கொண்டிருப்போர் (முன்சென்றுபோன) அவர்களைவிட மிகச் சிறந்தவர்களா? அல்லது, (வேதனையிலிருந்து) உங்களுக்கு விலக்கு (பற்றி ஏதும்) வேதங்களில் இருக்கிறதா?
54:44 اَمْ يَقُوْلُوْنَ نَحْنُ جَمِيْعٌ مُّنْتَصِرٌ‏
54:44. அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?
54:44. அல்லது, (நபியே!) நாங்கள் பெருங்கூட்டத்தினர் என்றும், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (எங்களுக்கு யாதொரு பயமுமில்லை;) என்றும் இவர்கள் கூறுகின்றனரா?
54:44. அல்லது ‘நாங்கள் ஒரு பலமிக்க குழுவினர் ஆவோம். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்’ என்று இந்த மக்கள் கூறுகின்றார்களா?
54:44. அல்லது (நபியே!) “நாங்கள் வெற்றி பெரும் (பெருங்) கூட்டத்தினர் என்று இவர்கள் கூறுகின்றனரா?
54:45 سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ‏
54:45. அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
54:45. அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.
54:45. இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்.
54:45. (இக்)கூட்டத்தினர் தோற்கடிக்கப்படுவார்கள், புறமுதுகிட்டும் ஓடுவார்கள்.
54:46 بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ‏
54:46. அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.
54:46. அன்றி, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணை. அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும்.
54:46. இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமைநாளாகும். மேலும், அது பெரும் ஆபத்தான, மிகவும் கசப்பான நேரமாகும்.
54:46. அதுவுமின்றி, மறுமைநாள் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும், மறுமை நாள் இவர்களுக்கு மிகப் பயங்கரமானது, மிக்க கசப்பானதுமாகும்.
54:47 اِنَّ الْمُجْرِمِيْنَ فِىْ ضَلٰلٍ وَّسُعُرٍ‌ۘ‏
54:47. நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
54:47. நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள்.
54:47. இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும், இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது.
54:47. நிச்சயமாகக் குற்றவாளிகள் வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர்.
54:48 يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ‏
54:48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
54:48. இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி "(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும்.
54:48. இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!”
54:48. இவர்கள் நரகத்திற்கு முகங்களின் மீது இழுத்து செல்லப்படும் நாளில், இவர்களிடம், (நீங்கள்) “நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவைத்துப்பாருங்கள்” (என்று கூறப்படும்).
54:49 اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏
54:49. நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
54:49. நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கின்றோம்.
54:49. நிச்சயமாக நாம் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கின்றோம்.
54:49. நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
54:50 وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍۢ بِالْبَصَرِ‏
54:50. நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
54:50. (யாதொரு பொருளையும் நாம் படைக்க நாடினால்) நம்முடைய கட்டளை(யெல்லாம்) கண் சிமிட்டுவதைப் போன்ற ஒன்றுதான்.
54:50. மேலும், நமது கட்டளை ஒரே ஒரு கட்டளையாகவே இருக்கின்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அது அமலுக்கு வந்துவிடுகின்றது.
54:50. நம் கட்டளை (நிறைவேறுவது) கண்சிமிட்டுவது போன்ற ஒரு கணமே தவிர இல்லை.
54:51 وَلَقَدْ اَهْلَـكْنَاۤ اَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
54:51. (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:51. (மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக் கின்றோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
54:51. உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
54:51. (மக்காவாசிகளே!) உங்களைப்போன்ற (எத்தனையோ) வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். ஆகவே (உங்களில்) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
54:52 وَكُلُّ شَىْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ‏
54:52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
54:52. இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர் களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கின்றது.
54:52. இவர்கள் செய்தவை அனைத்தும் பதிவேடுகளில் பதிக்கப்பட்டுள்ளன.
54:52. அவர்கள் செய்துவிட்ட ஒவ்வொரு விஷயமும் (பதிவு செய்யப்பட்டு அவர்களுடைய) குறிப்பேடுகளில் இருக்கின்றது.
54:53 وَ كُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ‏
54:53. சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
54:53. சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப் பட்டிருக்கும்.
54:53. ஒவ்வொரு சிறிய பெரிய விஷயமும் எழுதப்பட்டுள்ளது.
54:53. ஒவ்வொரு சிறிதும், பெரிதும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
54:54 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ‏
54:54. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
54:54. நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதிகளிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள்.
54:54. மாறு செய்வதை விட்டு விலகி இருப்பவர்கள் திண்ணமாக சுவனங்களிலும் ஆறுகளிலும் தங்கி இருப்பார்கள்.
54:54. நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.
54:55   فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ‏
54:55. உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.
54:55. அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த அரசனிடமுள்ளது.
54:55. உண்மையான கண்ணியத்திற்குரிய இடத்தில், பெரும் அதிகாரம் உடைய அரசனுக்கருகில்!
54:55. (மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள்.