பாடம் : 21 ஒன்றை வாதிடக் கூடியவர், அல்லது குற்றம் சுமத்துகின்றவர் தன் கூற்றுக்கு ஆதாரத்தைத் தேடிச் செல்லலாம்.
2670. அபூ வாயில்(ரஹ்) கூறினார்.
'ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவளை (மறுமையில் அவர் சந்திப்பார்)' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், 'அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது' என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: பிறகு அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?' என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதைத் தெரிவித்தோம். அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் அருளப்பட்டது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், 'உன்னுடைய இரண்டு சாட்சிகள் அல்லது அவரின் சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன') என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால், அவர் (அந்த யூதர், தயங்காமல்) பொய் சத்தியம் செய்வாரே. (பொய் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்பட மாட்டாரே' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கிறவன், தன் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பான்' என்று கூறினார்கள்.
'அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் இச்சொற்களை உறுதிப்படுத்தி (திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை) அருளினான்' என்று கூறிவிட்டு அந்த (திருக்குர்ஆன் 03:77) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
Book : 52
2671. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்' என்று மீண்டும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கூறுகிறார்:
இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு இப்னு அப்பாஸ்(ரலி) 'லிஆன்' தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்.
Book :52
பாடம் : 22 அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது.
2672. 'மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது. ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் உள்ள (தன் உபயோகத்திற்குப் போக, தேவைக்கு மேலுள்ள) மீதமான தண்ணீரை வழிப் போக்கர்களுக்குத் (தராமல்) தடுத்துக் கொள்ளும் மனிதராவார். மற்றொருவர், உலக லாபங்களுக்காக மட்டும் ஓர் ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவராவார். அவர் தனக்கு, தான் விரும்புவதைக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்து கொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார். இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 52
பாடம் : 23 பிரதிவாதியின் மீது சத்தியம் செய்வது கட்டாயமாகி விடும் இடத்தில் அவன் சத்தியம் செய்வான். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அவனைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. (ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் மிம்பரின் மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள், நான் என்னிடத்தில் இருந்தபடியே சத்தியம் செய்வேன் என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்து விட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், உனது இரு சாட்சிகளும் அவரது சத்தியமும் என்று தான் கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு (இன்ன இடத்தில் செய்யும் சத்தியம் என்று) கூறவில்லை.
2673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பிரமாண வாக்குமூலத்தின் போது) ஒரு செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book : 52
பாடம் : 24 பிரமாண வாக்குமூலம் தர வேண்டிய ஒரு சமுதாயத்தார் அதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டால்.... (குலுக்கல் முறை கையாளப்படும்.)
2674. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் பேடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
Book : 52
பாடம் : 25 அல்லாஹ் கூறுகிறான்: எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது. (3:77)
2675. அபூ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் (கடைத் தெருவில்) தம் சரக்கை (மக்கள் முன்) வைத்து, அல்லாஹ்வின் பெயரால் சத்தியமிட்டு, அதற்கு அவர் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அப்போது மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) இறைவசனம் அருளப்பட்டது.
Book : 52
2676. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.
'ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ்(ரலி) என்னைச் சந்தித்து, 'அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்க, நான். 'இன்னின்ன விஷயங்களைப் பேசினார்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது' என்று கூறினார்கள்.
Book :52
பாடம் : 26 சத்தியம் செய்வது எப்படி? அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிடுகின்றார்கள். (9:62,74) பிறகு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும் இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை என்று சத்தியம் செய்து கொண்டு (நபியே!) உங்களிடம் வருவார்கள். (4:62) சத்தியம் செய்யும் போது, பில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி இவற்றில் ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும். (இவையனைத்துமே அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற பொருளைத் தான் கொண்டுள்ளன.) நபி (ஸல்) அவர்கள், அஸர் தொழுகைக்குப் பிறகு பொய் கூறியவனாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த ஒரு மனிதன் என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யக் கூடாது.
2677. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.
'ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ்(ரலி) என்னைச் சந்தித்து, 'அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்க, நான். 'இன்னின்ன விஷயங்களைப் பேசினார்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது' என்று கூறினார்கள்.
Book : 52
2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)' என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்' என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்' என்றார்கள்.
Book :52
2679. 'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :52
பாடம் : 27 பிரதிவாதி சத்தியம் செய்த பிறகு வாதி ஆதாரம் கொண்டு வந்தால் (ஏற்கப்படுமா?) நபி (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் மற்ற சிலரை விட தன் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுர்யம் அதிகமுள்ளவராக இருக்கலாம் என்று கூறினார்கள். நீதியான ஆதாரம், பொய்யான சத்தியத்தைக் காட்டிலும் (ஏற்றுக் கொள்ள) முன்னுரிமை பெற்றதாகும்என்று தாவூஸ் (ரஹ்), இப்ராஹீம் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்) ஆகியோர் கூறு கின்றார்கள்.21
2680. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். எனவே, எவருடைய (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரின் சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். எனவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Book : 52
பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது. ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். ( அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடு வீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54) (கூஃபா நகர நீதிபதியான) இப்னு அஷ்வஃ (ரஹ்) அவர்கள், வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து (கேட்டுக்) கூறினார். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் ரபீஉ (ரலி) என்பாரை) நினைவு கூர்ந்து, அவர் எனக்கு வாக்குறுதி யளித்து, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்என்று கூறினார்கள். அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஃ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
2681. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்:
(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, 'உம்மிடம், 'அவர் (முஹம்மது - ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டேன். நீர், 'அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்' என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்' என்று கூறினார்.
Book : 52
2682. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :52
2683. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), 'யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)' என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், 'எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்' என்று கூறினேன். - 'இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்' என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் - அபூ பக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.
Book :52
2684. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.
என்னிடம் 'ஹீரா'வாசியான யூதர் ஒருவர், 'மூஸா(அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்' என்று கேட்டார். நான், 'எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம் சென்று அவரிடம் கேட்கும் வரை (காத்திரு)' என்று கூறினேன். அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள், 'அவ்விரண்டில் அதிகமானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (எவராயிருப்பினும் அவர்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்' என்று கூறினார்கள்.
Book :52
பாடம் : 29 இணை வைப்போர் சாட்சியம் முதலான காரியங்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள். பிற சமுதாயங்களிடையே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக சாட்சியம் கூறினால் அது செல்லுபடி யாகாது; ஏனெனில், அல்லாஹு தஆலா, நாம் அவர்களுக்கிடையே மறுமை நாள் வரை விரோதத்தையும், பொறாமை யையும் விதைத்து விட்டோம்(5:14) என்று கூறுகிறான் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை24 உண்மைப்படுத்தவும் வேண்டாம்; பொய்ப்பிக்கவும் வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வையும், அவனால் அருளப் பெற்ற வேதங்களையும் நம்புகிறோம் என்று மட்டும் கூறுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2685. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்களே! இறைவனின் தூதர்(ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் கருத்துகள்) கலக்கப்படாத நிலையில் ஓதிக் கொண்டிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங்களின் விபரங்களைக்) கேட்கிறீர்கள்? வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள். தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு - (திருக்குர்ஆன் விவரிப்பது போல்) 'அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' - என்று கூறினார்கள். (அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள அறிவு ஞானம் (இறைவேதமான திருக்குர்ஆன்) உங்களை அவர்களிடம் கேட்பதிலிருந்து தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் ஒருவரையும் உங்களின் மீது அருளப்பட்டதை (திருக்குர்ஆனைப்) பற்றிக் கேட்பவராக நான் கண்டதேயில்லையே.
என உபைதுல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அறிவித்தார்.
Book : 52
பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) இவையனைத்தும் மறை வான செய்திகள். இவற்றை உங்களுக்கு வஹீ (எனும் வேத வெளிப்பாட்டின்) மூலம் நாம் அறிவிக்கின்றோம். (இறையில்லத்தின் சேவகர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப் பாளராவது என்று முடிவு செய்திடத் தங்கள் எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்த போதும், தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருந்த போதும் (நீங்கள் அவர்களிடையே இருக்க வில்லை.) (3:44) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தங்கள் எழுதுகோல் களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களது எழுதுகோல்கள் நீரோட்டத் துடன் சென்று விட்டன. ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மிகைத்து (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று) விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.25 மேலும், அல்லாஹ் கூறுகிறான்: சீட்டுக் குலுக்க-ல் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய் விட்டார். (37:141) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தை சத்தியப் பிரமாணம் செய்யும்படி அழைத்தார்கள். அவர்கள் விரைந்து ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு வந்தார்கள்; ஆகவே, அவர்களில் எவர் (முத-ல்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர் களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.26
2686. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சட்டங்களில்விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, 'உனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அவன், 'நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித் கொள்வேன்)' என்று கூறினான். (துளையிடவிடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள் பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பறிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட)விட்டுவிட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
Book : 52
2687. காரிஜா இப்னு ஸைத் அல் அன்சாரீ(ரஹ்) அறிவித்தார்.
உம்முல் அலா(ரலி) எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.
அவர்கள் எனக்குத் தெரிவித்தாவது: 'முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பது' என்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பங்காக வந்தது. எனவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள், அவருக்கு நோய் ஏற்பட்டபோது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் மரணித்துவிட்டபோது அவரை அவரின் துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் இப்னு மழ்வூனை நோக்கி), 'அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தெரியாது?' என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்' என்று கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கே நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் 'அவரிடம் எப்படி நடந்து கொள்ளப்படும்; (மறுமையில் அவரின் நிலை என்னவாகும்?)' என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் 'அது அவரின் (நற்)செயல்' என்று கூறினார்கள்.
Book :52
2688. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் மனைவிமார்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய பெயர் வருகிறதோ அவர் நபி(ஸல்) அவர்களுடன் புறப்படுவார். நபி(ஸல்) அவர்கள் (தம்) மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் இரவையும் பகலையும் பங்கிட்டு விட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த்து ஸம்ஆ(ரலி) மட்டும் தம் பகலையும், இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள்.
என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
Book :52
2689. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை அழைப்பான) பாங்கு சொல்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ருத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :52