பாடம் : 15 ஷஜரா எனும் பாதை வழியாக (ஹஜ்ஜுக்கு) நபி (ஸல்) அவர்கள் செல்லல்.
1533. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்.
Book : 25
பாடம் : 16 அகீக் (எனும் பள்ளத்தாக்கு) அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
1534. உமர்(ரலி) அறிவித்தார்.
'என்னுடைய இறைவனிடத்திலிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து 'இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!' எனக் கட்டளையிட்டார்' என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற, கேட்டேன்.
Book : 25
1535. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) 'நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்' என்று (வானவரால்) கூறப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போல் இப்னு உமரும் அங்கேயே தம் ஒட்டகத்தை உட்கார வைப்பார். அவரின் மகன் ஸாலிமும் அவ்வாறே செய்வார். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல் வாதியிலுள்ள பள்ளி வாசலின் கீழ்ப் புறத்தில் சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவிலுள்ளது என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.
Book :25
பாடம் : 17 (இஹ்ராம் கட்டும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) நறுமணமிருந்தால் மூன்று முறை கழுவுதல்.
1536. யஃலா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வந்தது. உமர்(ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் 'உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!' என்று கூறினார்கள்.
'மும்முறை கழுவச் சொன்னது நன்கு சுத்தப்படுத்தவா?' என்று (அறிவிப்பாளரான) அதா(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் 'ஆம்!' என்றார்' என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.
Book : 25
பாடம் : 18 இஹ்ராம் கட்டும் போது நறுமணம் பூசுவதும் இஹ்ராம்கட்ட நாடும் போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவுவதும் தலைவாருவதும். இஹ்ராம் கட்டுபவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட்கொள்ளும் எண்ணெய், நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மோதிரம் அணியலாம், பையுள்ள இடுப்புவாரை அணியலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், இஹ்ராம் கட்டிய நிலையில் தமது வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஒட்டகப் பல்லக்கில் பயணிப்பவர் அரைக்கால் சட்டை அணிவதில் குற்றமில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1537. & 1538. ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) (இஹ்ராம் அணிந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீமிடம் நான் கூறியபோது, 'அவர் என்ன சொல்வது? (இது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமா இருக்கிறதே) என்றார். (மேலும் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது அவர்களின் தலையின் வகிட்டில் பார்த்த நறுமண எண்ணெய்யின் மினுமினுப்பு நான் இன்று பார்ப்பது போலுள்ளது என்று ஆயிஷா(ரலி) கூறியிருக்கிறாரே' என இப்ராஹீம் கூறினார்.
Book : 25
1539. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.
Book :25
பாடம் : 19 (தலைமுடி காற்றில் பறக்காமலிருக்கக்) களிம்பைத் தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டுவது.
1540. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூறியதைக் கேட்டேன்.
Book : 25
பாடம் : 20 துல்ஹுலைஃபாவின் பள்ளியில் இஹ்ராம் கட்டுவது.
1541. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை.
Book : 25
பாடம் : 21 இஹ்ராம் கட்டியவர் அணியக் கூடாத ஆடைகள்.
1542. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!' என்றார்கள்.
Book : 25
பாடம் : 22 ஹஜ்ஜின் போது பயணம்செய்வதும் தம் வாகனத்தில் பிறரை ஏற்றிச் செல்வதும்.
1543. & 1544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களோடு வாகனத்தின் பின் அமர்ந்து அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை சென்றார். பிறகு ஃபழ்ல்(ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை சென்றார். 'நபி(ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியாவை நிறுத்தவில்லை' என இவ்விருவருமே கூறினார்கள்.
Book : 25
1545. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எண்ணெய் தடவித் தலைசீவி வேட்டியும் துண்டும் அணிந்து தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து (இறுதி ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல் மீது ஒட்டிக் கொள்ளும் அளவு குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி வேட்டி, துண்டு அணிவதைத் தடுக்கவில்லை - துல்ஹுதைஃபாவிற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தம் வாகனத்தில் ஏறியமர்ந்து பய்தா எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) தம் ஒட்டகத்தில் அடையாளமாகச் சிலவற்றைத் தொங்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாள்களின் மீதுமிருக்கும்போது நடந்தது. துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்றடைந்தபோது கஅபாவை வலம் வந்து ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்தைத் தம்மோடு கொண்டு வந்ததனால், (தலை முடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்த நிலையில் மக்காவின் மேற்பகுதி ஹஜுன் எனும் மலையில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவை வலம் வந்தவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவிற்கு வந்தார்கள். இதற்கு இடையில் கஅபாவை நெருங்கவில்லை. தம் தோழர்களுக்குக் கஅபாவை வலம் வரவும் ஸஃபா, மர்வாவில் ஓடவும், பிறகு தலை முடியைக் குறைக்கவும் இஹ்ராமிலிருந்து விடுபடவும் கட்டளையிட்டார்கள். இது தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டு வராதவர்களுக்குச் சொல்லப்பட்டதாகும். இவர்களில் மனைவியோடு வந்தவர்கள் உடலுறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் அணிவது ஹலாலாகும்.
Book :25
பாடம் : 24 விடியும்வரை துல்ஹுலைஃபாவில் தங்குவது இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்கு செல்லும்போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு அங்கேயே விடியும் வரை தங்கினார்கள். பிறகு வாகனத்தில் அமர்ந்து வாகனம் நிலைக்கு வந்தபோது இஹ்ராம் அணிந்தார்கள்.
Book : 25
1547. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும் வரை தங்கினார்கள் என எண்ணுகிறேன்.
Book :25
பாடம் : 25 தல்பியாவை சப்தமாகக் கூறுவது.
1548. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல்ஹுதைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற்கான தல்பியாவை சப்தமாகக் கூற கேட்டேன்.
Book : 25
பாடம் : 26 தல்பியா கூறுதல்.
1549. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.'
இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
Book : 25
1550. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தல்பியா எவ்வாறு இருந்தது என்பதை நான் நன்கறிவேன்.
'இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! புகழும் அருட்கொடையும் உனக்கே உரியன!'
இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
Book :25
பாடம் : 27 இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலே அல்ஹம்து லில்லாஹ்,சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர் கூறுவது.
1551. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.
Book : 25
பாடம் : 28 வாகனம் நிலைக்கு வரும் போது தல்பியா கூறுதல்.
1552. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
வாகனம் நிலைக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள்.
Book : 25